தன் மேல் போர்த்தியிருந்த கருமை நிறக் கம்பளியை உதறி எழுந்த சூரியன், அடுத்த அடுக்குப் போர்வையாகப் படிந்திருந்த பனிமூட்டத்தைத் தன் வெப்பம் கொண்டு அகற்றி, உதகையின் கிழக்கை வெளுக்க வைக்கும் முயற்சியில் நேரம் கழித்து வெற்றி கண்டிருந்தான்.
மலைகளின் அரசி, இயற்கையின் அழகை மொத்தமாய் சூறையாடி, காணும் இடம் எங்கும் அள்ளித் தெளித்திருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
பச்சை வண்ணக் கார்ப்பெட்டில் வண்ணப் புள்ளிகள் வைத்துக் கோலம் வரைந்தது போல் சுற்றிலும் அமைந்த மலர்க்காட்டின் மத்தியில் கம்பீரமாய் எழுந்து நின்றது உமையம்மை குடும்பத்தின் பாரம்பரிய வீடு.
சூரிய வெப்பத்தில் உருகிய பனி நீர்த்துளிகள் வீட்டின் மேல் படிந்து ஒழுகி, காங்கிரீட்டாலான அந்த மினி அரண்மனையை, பளிங்கு மாளிகை போல் மாயைப் படுத்திக் கொண்டிருந்தன.
வீட்டின் வெளிப்புறத்தை அழகு படுத்தும் பொறுப்பை இயற்கை எடுத்துக்கொள்ள, உள்ளழகை உரிமையாளர்கள் பார்த்து பார்த்து செதுக்கி வைத்திருந்தனர்.
திரும்பும் இடமெங்கும் ஆன்டிக் ஃபீல் கிடைக்கும் வகையில் தான் அமைந்திருந்தன, வீட்டின் உள் அலங்காரங்கள் ஒவ்வொன்றும். வீட்டின் தளபாடங்கள் கூட, புதுமையோடு சேர்ந்த ஒரு பழமையை தம்வசப்படுத்தி இருந்தன.
இது காலை உணவுக்கான நேரம் என்பதை, பறைசாற்றும் விதமாக ஹாலில் போடப்பட்டிருந்த கருந்தேக்கு மரத்தாலான ராட்சத டைனிங் டேபிளில், ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும் ராணியின் மிடுக்குடன் அமர்ந்திருந்தார் உமையம்மை.
அவர் வலதுபுறம் அவர் மூத்தமகள் சீதா அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் சீதாவின் ஒற்றை மகள் ரேணுகா அமர்ந்திருந்தாள்.
இவர்கள் வந்து அமர்வதற்கு முன்னமே சமையல்காரப் பெண், உணவு பதார்த்தங்களை டேபிளில் அடுக்கி விட்டு அங்கிருந்து அகன்றிருந்தாள்.
பரிமாறும் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. அவர்களாகவே போட்டுக் கொண்டு உண்ண வேண்டும். இது உமையம்மை எழுதாத சாசனம்.
“யுவா எங்க சீதா?”
அவரின் ஒற்றைக் கேள்விக்குள், ‘இந்நேரம் கிளம்பி வந்திருக்க வேண்டுமே அவன்? ஏன் வரவில்லை? என்னவென்று சென்று பார்த்தாயா?’ என்ற பல கேள்விகள் உள்ளடங்கி இருந்தன.
அது புரிந்த சீதாவும், “எந்திரிச்சுட்டான் மா. ஆனா என்னனு தெரில, லேட்டா தான் எந்திரிச்சான். வழமையா போற ஜாகிங் கூட போகல. காபி குடுக்கப் போனப்போ தான் பார்த்தேன், கண்ணு ரெண்டும் நல்லா சிவந்து போய் இருந்துச்சு. நைட்டு சரியா தூங்கிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.” என்று பதில்களை அடுக்கினாள்.
“அம்மா கண்ணு சிவந்திருந்தா தூங்கலன்றது தான் ஒரே அர்த்தமா? ஒருவேளை மாமா நேத்து நைட்டு யாருக்கும் தெரியாம தண்ணி அடிச்சிருக்கலாம் இல்லையா? அந்த மப்புலயே விடிஞ்சது கூட தெரியாம தூங்கி இருக்கலாமே!” என்ற மகளை சீதா கண்களால் கண்டிக்கும் முன்,
“ரேணு!” என்ற அழுத்தமான அழைப்பில் அவள் தவறை சுட்டிக்காட்டி இருந்தார் உமையம்மை.
அப்போதே பாட்டி இருப்பது மறந்து வாயை விட்ட தன் மடத்தனத்தை உணர்ந்து, நாக்கைக் கடித்துக் கொண்ட ரேணு,
“சாரி பாட்டி.. காலேஜ்ல பிரண்ட்ஸ் கூட பேசுற மாதிரி நினைச்சு டக்குனு பேசிட்டேன்.” என்று கண்ணை சுருக்கிக் கெஞ்சினாள்.
இந்த வீட்டில் தவறுகளை உணர்ந்து கொண்டவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும். உணர மறுப்பவர்களுக்கு அவரவர் தவறுகளுக்குத் தக்கன தண்டனைகள் நிறைவேற்றப்படும்.
தண்டனைகள் வரமாகிப் போகும் அதிசயம் எல்லாம் அவர் மகன் ஒருவனுக்கு மட்டுமே இறைவன் கொடுத்த கொடை ஆகையால், மற்றவர்கள் பெரும்பாலும் அந்த மிலிட்டரி ஸ்கூலின் விதிகளை மீற முனைவதே இல்லை.
பேத்தி உடனே மன்னிப்புக் கேட்டபோதும் உமையம்மை திருப்தி கொள்ளாதவர்,
“நாக்கைத் தாண்டி நம்ம வார்த்தை வெளில வரும்போது, அது நமக்கும் அடுத்தவங்களுக்கும் பாதகம் இல்லாத மாதிரி வரணும். அதுலயும் முக்கியமா பொண்ணுங்க… அவங்க பேசுற ஒவ்வொரு வார்த்தைக்குமான பின் விளைவை முன்னாடியே யோசிச்சுப் பேசணும்.” என்றார் அழுத்தம் திருத்தமாக.
“அது ஏன் பொண்ணுங்க மட்டும் விளைவை யோசிச்சுப் பேசணும்? ஆம்பளைங்க யோசிச்சா ஆகாதா? இல்ல, ஆம்பளைங்களுக்கு அப்பிடி யோசிக்கத்தான் தெரியாதா?”
காற்றலைகளைக் குழப்பிக் கூறு போட்டவாறு வந்து செவியை அடைந்த கேள்வியில், மூன்று பெண்களும் அந்த ஒலிக்கு முதலானவனின் பக்கம் பார்வையைத் திரும்பினர்.
அவர்கள் வீட்டின் இளவல், யுவராஜன் இறுதிப்படியைக் கடந்து, இறங்கி இவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
ஃபுல் அண்ட் ஃபுல் ஃபார்மல் உடையில் ஷர்ட்டை நீட்டாக டக்-இன் செய்திருந்த அவன் இடது கை மணிக்கட்டில் வாகாக பொருந்தி இருந்தது உயர் ரக டைடன் பிரிஸ்ட் வாட்ச்.
சற்று முன் சீதா அவனைப் பற்றி சொன்ன எந்த தொய்வுக்கும் சம்மந்தமே இல்லாதவன் போல், அவன் முகத்தில் எப்போதும் போல் கம்பீரமும் கவர்ச்சியும் போட்டி போட்டு அவனைப் பேரழகனாய் காட்டியது.
உணவு மேஜையைக் கால்கள் எட்டியதும் அதுவரை அவனின் வலது கரத்தின் பிடிக்குள் சிக்கியபடி சமூக வலைத்தளத்தை ஒளிரவிட்டுக் கொண்டிருந்த தொலைபேசியின் திரையை லாக் செய்து, பாக்கெட்டில் போட்டுக் கொண்டவன், இருக்கையில் அமர்ந்து, தட்டை எடுத்து வைத்து, தனக்கான உணவைத் தானே போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தான்.
அதுவரை நேரமும் மகள் சொன்னது உண்மையா என்ற ஆராய்ச்சியில் அவனின் முகத்தையே தான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் உமையம்மை. அவன் தன்னை எதிர்த்துக் கேட்ட கேள்வியை மறந்தே போயிருந்தார்.
அதில் ரேணுவுக்கு ஏக வருத்தமாகிப் போனது. மாமனின் கேள்விக்குப் பாட்டி பதில் சொல்லி, அதை இடித்து மாமன் மறு பதில் சொல்லி என்று சுவாரசியமான ஒரு விவாதம் மிஸ்ஸாகிப் போய்விட்ட ஃபீல் அவளுக்கு.
இருந்தாலும் அதை அப்படியே விட மனமின்றி, “பாட்டி! மாமா கேட்ட கேள்விக்கு பதில் நீங்க இன்னும் சொல்லலையே?” என்று எடுத்துக் கொடுத்தாள்.
உமையம்மையும் அப்போதே அதை நினைவில் கொண்டு வந்தார் என்றாலும் உள்ளதைக் காட்டிக் கொள்ளாதவர்,
“என்ன பண்ணுறது ரேணு, உங்க மாமாவோட கெட்டிக்காரத்தனம் எல்லாம் கேள்வி கேட்கிறதோட சரி, கேட்ட கேள்விக்கான பதிலை எதிர்த்தரப்புக்கிட்ட இருந்து கறாரா வாங்குற கெட்டிக்காரத்தனம் எல்லாம் அவன்கிட்ட இல்லாதப்போ, பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்துச்சு?” என்றார் அலட்சியமாக.
அவனை சீண்டும் பேச்சு தான். என்ன செய்வது, பட்டை தீட்ட தீட்டத் தானே தங்கத்தின் ஜொலிப்பு அதிகரிக்கும்?
“ரேணு! டூ யூ நோ ஒன் திங்க்? கேள்வி கேட்டவன் அடுத்த வார்த்தை பேச முடியாத அளவுக்குப் பதில் சொல்லத் தெரிஞ்ச கெட்டிக்காரங்க யாரும், கேள்வி கேட்டவனே சிரமப்பட்டு பதிலை வாங்கணும்னு காத்துட்டு இருக்கமாட்டாங்க. பாதிக் கேள்வி கேட்டு முடிக்க முன்னாடியே ஃபயர் ரிப்ளை குடுத்திருப்பாங்க. அந்த வேகமும் விவேகமும் கூட ஒருவகையான கெட்டிக்காரத்தனம் தான்.”
எந்தவித திக்கலும் திணறலும் இன்றி இரண்டு விள்ளல் இட்லியை விழுங்க எடுக்கும் இடைவேளைக்குள் தாய்க்கு சரியான பதிலடி கொடுத்தவன், நித் சலனமாக அடுத்த துண்டு இட்லியைப் பிட்டு சாம்பாரில் பட்டும் படாமலும் தொட்டெடுத்து வாய்க்குள் தள்ளினான்.
ரேணு, அடுத்து உங்க டர்ன் என்பது போல் ஆர்வமாகப் பாட்டியின் வாயைப் பார்த்தாள்.
மகனுக்கு சுட சுட எதுவோ பதிலடி கொடுக்க வந்த உமையம்மை, தன்னை ஆர்வமாய் மொய்க்கும் ரேணுவின் விழிகளைக் கண்டதும் சுதாரித்துக் கொண்டார்.
அவள் முன் இப்படியான விவாதங்கள் அழகல்ல. அது இருவர் மீதான மரியாதையையும் அவள் மனதில் குறைத்து விடக்கூடும் என்று அமைதியானவர், மகனிடம் அதற்கு மேல் பேச்சு வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
ஆனாலும் அவன் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டி,
“ரொம்ப நல்லா பேச கத்துக்கிட்டிருக்க யுவா! ஆனா அந்தத் திறமையை யாருகிட்ட காட்டுறோம்றதுல நிறைய கவனம் வேணும்.” என்று சிறு கண்டிப்போடு அவர் முடித்துக்கொள்ளப் பார்க்க…
யுவா, தான் அனுபவிக்கும் வேதனைகள் எல்லாவற்றுக்கும் முதல் காரணமே இவர் தான் என்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக அவர் மேல் கோபத்தை வளர்த்து வைத்திருப்பவன், அவரை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவானா?
“குருவை மிஞ்சின சிஷ்யன்… அம்மாவை மிஞ்சின பையன்… இதையே வாழ்க்கையோட லட்சியமா வச்சு, சாட்டையை கையில வச்சுக்கிட்டு சர்க்கஸ் குரங்கு மாதிரி என்னை அவங்க இஷ்டத்துக்கு ஆட்ட நினைக்கிறவங்களுக்கு என் பேச்சுத் திறமை பார்த்து புல்லரிச்சு தான போகணும்? எதுக்கு ரத்தம் கொதிக்குது?” சுருக்கெனக் கேட்டு விட்டான்.
அவன் கேள்வியில் சீதா பதறிப் போய் தாயைப் பார்த்தாள். ஆனால் உமையம்மையோ எந்த உணர்வுகளையும் முகத்தில் காட்டாமல் கல்லாய் அமர்ந்திருந்தார்.
மலையைத் தூக்கி தலைமேல் வைத்தாலும் மருகித் தேங்கும் குணமெல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. முடிந்தால் இறக்கி வைப்பார். இல்லையென்றால் முயன்று அதையும் தூக்கிக்கொண்டு நடப்பார்.
கணவன் இறந்த அடுத்த நாளே, துக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு தொழிற்சாலையைப் பார்க்கக் கிளம்பிய இரும்புப் பெண்மணி அவர்.
கூடாது என்று எதிர்த்து அவரைத் தடுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லாவிடினும் பக்குவமாக எடுத்துச் செல்ல வந்த சிலரிடமும்…
“அவர் இருக்கிற வரைக்கும் அவருக்கான எல்லா கடமையையும் தவறாம பண்ணேன். அவர் இறந்து போனப்பவும் இறுதி யாத்திரையில அவருக்கான சகல மரியாதையும் கொடுத்து அனுப்பி வச்சேன். இதைத் தாண்டி அவர நினைச்சு மூலையில அழுதுட்டு கிடந்துதான் அவர்மேல நான் வச்சிருக்க அன்ப ஊருக்கு காட்டணும்னு இல்ல. எனக்குனு அடுத்தடுத்து கடமைகள் காத்துட்டு இருக்கு. அதுக்கும் தான் மரியாதை செய்யணும்.” என்று விட்டு வீரநடை போட்டவர்…
தன் கணவன் இழந்த அடுத்த வருடமே, முத்தமகள் சீதாவின் கணவன், ராணுவ வீரன், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டபோது, பாலத்தின் அடியில் தவறி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த செய்தி அறிந்த போதும், ஸ்திரமாக நின்று உடைந்து நின்ற மகளையும் பேத்தியையும் தன் இறகுகளுக்குள் பொதிந்து, இங்கு கொண்டு வந்து வாழ வைத்துக் கொண்டு இருப்பவர்…
இப்படி குடும்பத்தின் உயிரிழப்புகளுக்கே ஒடிந்து போகாத அவரா, கண்முன் முழுமையாக இருக்கும் மகனின் வார்த்தையில் கலங்கி நிற்பார்?
உமையம்மை மகனைத் தீர்க்கமாகப் பார்த்தவர், “நல்லத மட்டும் கேட்டு நடந்திடவே கூடாதுன்ற உன்னோட குணம் மட்டும் என்னைக்குமே மாறாதுனு எனக்கு நல்லாவே தெரியும் யுவா! அதால அஞ்சிலயே வளைக்க முடியாத உன்னை இருபத்தஞ்சு தாண்டி வளைக்க முயற்சி பண்ணி என் நேரத்தை வீணடிக்க நான் தயாரா இல்ல. ஆனா… உன்னப் பாத்து இந்த வீட்ல ஒரு பொண்ணு வளந்துட்டு இருக்கா. அவளுக்குத் தப்பான உதாரணமா ஆகிடாத! அவ்வளவு தான் சொல்ல முடியும்.” என்றார் அப்போதும் கடும் தொனியில்.
அவரின் இத்தகைய பேச்சில் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற யுவா, அவருக்குப் பதில் சொல்லிப் பிரயோசனம் இல்லை என்று, ரேணுவிடம் திரும்பினான்.
“ஏன் ரேணு, நான் டெய்லி மார்னிங் ஜாகிங் போவேனே, அதைப் பார்த்து உனக்கு ஜாகிங் போகணும்னு தோணுறதே இல்லையா?”
“போங்க மாமா. இந்தக் குளிர்ல நான்லாம் எந்திரிச்சு வீட்டுக்குள்ள நடமாடுறதே பெரிய விஷயம். இதுல ஜாகிங் எல்லாம்… நெவர்” என்றாள் உடலை உதறி.
“ஜாகிங் முடிச்சுட்டு வந்து ஒர்க்கவுட் பண்ணுவேனே, அதைப் பார்த்து உனக்கு எக்ஸர்சைஸ் பண்ணத் தோணுச்சா?”
“ம்ஹூம்… நான் ஆல்ரெடி ஸ்லிம்மா தான இருக்கேன்?”
“எக்சர்சைஸ் பண்ணுறது ஸ்லிம்மா இருக்க இல்ல ரேணு, ஹெல்தியா இருக்க! சரி அதை விடு, நான் ஜங் ஃபுட் ஆயில் அதிகமா இருக்க ஃபுட், என்ஹெல்த்தி ஸ்நாக்ஸ் இதெல்லாம் சாப்பிட மாட்டேன்னு உனக்குத் தெரியும்ல? நீ இதுவரைக்கும் அதை ஃபாலோ பண்ணிருக்கியா?”
“நோ மாமா.” என்று சிலுத்துக் கொண்டவள், “இந்தப் பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடைச்சது!” என்று ராகமிழுத்தாள்.
இப்போது அவளை விடுத்துத் தாயிடம் திரும்பிய யுவா, அவரை அர்த்தமாகப் பார்த்தான்.
“இவ இதுவரைக்கும் என்னைப் பார்த்து எந்த நல்லதையும் கத்துக்கல. சோ கெட்டதைக் கத்துக்கிட்டாலும் அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.” என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார் உமையம்மை.
அவன் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது, கைகளைக் கழுவிக்கொண்டு எழுந்தவன்,
“அக்கா! ரேணுவை எப்போவும் போல நானே காலேஜ்ல விட்டுடவா? இல்ல, வேற யாராவது தூய ஆத்மாவைத் தேடி வேலைக்கு வச்சிக்கிறீங்களா?” என்றான் வம்பை விடாமல்.
“தப்பித் தவறி ஒரு வார்த்தை விட்டுடக்கூடாதே உனக்கு? எங்கடானு காத்துட்டிருந்து அதையே பிடிச்சு தொங்குவியே!”
அவளோ இவர்கள் கருத்தெல்லாம் எனக்கு இரண்டாம் பட்சம் என்பது போல்,
“இதோ மாமா, நான் ரெடி.” என்று எழுந்து கொண்டவள், இருவரிடமும் தனித்தனியாக சொல்லி விட்டு முன்னே நடக்க, “வரேன்..” என்ற ஒற்றை சொல்லுடன் அவளைத் தொடர்ந்து வெளியேறினான் யுவா.
செல்லும் தங்கள் மக்கள் இருவரையும் பார்த்திருந்த இரு தாய்மார்களுக்குள்ளும் ஏதேதோ கணக்குகள். ஆனால் அவர்கள் கணக்கெல்லாம் இங்கே கணக்கே இல்லையே!
ஒருவேளை அவர்கள் போட்ட கணக்கு முறையாகத் தீர்ந்து சரியான விடை கிடைத்தாலுமே கூட, கேள்வியை அடித்து மாற்றி விட்டு, பதில் தவறு என்று சொல்லக் கூடியவன் ஆயிற்றே யுவா!
*******************
ஊட்டியின் வளைந்து நெளிந்து ஏறி இறங்கி செல்லும் மலைப் பாதைகளுக்கு ஈடுகொடுத்து யுவாவின் கைப்பிடியில் தங்கத் தேராக நகர்ந்து சென்று கொண்டிருந்தது, மஹேந்திரா தார்.
ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த ரேணு, வீடு தாண்டிவிட்ட தைரியத்தில் அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.
“மாமா! பாட்டி சொல்றது மாதிரி நீங்க ரொம்ப மோசம் எல்லாம் இல்ல. நீங்க செம சூப்பர். ஒரு ஆண் பெண்ணியம் பேசுறதுலாம் வரலாற்று சாதனை மாமா. நீங்க சான்ஸே இல்ல மாமா.” என்று மாமனைப் புகழ,
தன் யோசனையில் இருந்த யுவா, அவளின் பேச்சில் கலைந்தவன்,
“நான் ஃபெமினிஷம் பேசினேனா, இது எப்போ?” என்றான் அவளை விசித்திரமாகப் பார்த்து.
“எப்போவா? அதிலிருந்து தானே உங்களுக்கும் பாட்டிக்கும் பட்டிமன்றமே ஸ்டார்ட் ஆச்சு?”
“ஓஹ்… அத சொல்றியா நீ? அது பெண்ணியம் இல்லடா ரேணு. அது ஆணியம்!” என்றவனை ங்ஙே.. என்று பார்ப்பது இப்போது இவள் முறையாயிற்று.
அவள் பாவனையில் யுவாவுக்கு சிரிப்பு வரும் போல் இருக்கவே அடக்கிக் கொண்டவன்,
“என்ன ரேணு?” என்றான் கேள்வியாக.
“தப்பு தான் மாமா!”
“எதுடா? நான் பேசினதா?
“இல்ல, உங்ககிட்ட நான் பேசினது..” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள, யுவா வாய்விட்டே சிரித்தவன்,
“நான் சீரியஸா தான் சொல்றேன் ரேணு. பொண்ணுங்க அப்படி இருக்கணும், பொண்ணுங்க இப்படி இருக்கணும்னு சொல்லுறதெல்லாம் மறைமுகமா, பசங்க நாங்க எல்லாரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாம கட்டவிழ்ந்து திரியுறோம்ன அர்த்தத்தை தாங்கி வருதா இல்லையா?”
“பேசுறப்ப யோசிச்சு பேசணும்றது பேஸிக்கா எல்லாருமே ஃபாலோ பண்ண வேண்டிய ஒன்னு. அத அப்படி சொல்லாம, பொண்ணுங்க பேசும்போது யோசிச்சு பேசணும்னா, என்ன சொல்ல வராங்க இவங்க? யோசிக்காம பேசுறது, முட்டாள்தனமா பேசுறது எல்லாம் பசங்க மட்டும் தான் பண்ணனும்னா? இல்ல, பண்ணுவாங்கனா?”
“உங்க நியாயத்தைக் கொட்ட நான் ஒரு ஐடியா சொல்லுறேன் கேட்டுக்கோங்க. முதல்ல பாட்டிக்கிட்ட கேட்டு ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கங்க. அப்புறம் அவங்களை உக்கார வச்சு, நீங்க சேர்த்து வச்ச உங்க நியாயத்தை எல்லாம் அத்தை காதுல ஒட்டு மொத்தமா ஓதுங்க. உங்களைக் கட்டின பாவத்துக்குக் கேட்டுகிட்டு இருப்பாங்க. என்னை ஆளை விடுங்க சாமி.”
ரேணு வேடிக்கையாகப் பேசிவிட்டு, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
கேட்டவன் முகம் தான், இதுவரை இருந்த இலகு தன்மையைத் தொலைத்து நொடியில் இறுகிப் போனது.
தன் நியாயங்களை மட்டுமல்ல, இன்னும் நிறையனவற்றை அவளிடம் சொல்ல, அவனுமே ஏங்கித் தானிருக்கிறான்.
அவள் தவிக்க விட்டு சென்ற பின் நெஞ்சில் எடை கூடிய காதலை…
அவளின்றி முக்தி பெறாத மோகத்தை…
ஏமாற்றி விட்டு சென்ற அவள் மேலான கோபத்தை…
அவளோடு மட்டுமே கூடித் தணிக்கத் துடிக்கும் தாபத்தை…
இப்படி இன்னும் நிறைய சொல்ல வேண்டும் அவளிடம்..!
அத்தனையையும் அவள் காதுகளுக்குள் அன்றி இதழ்களுக்குள் ஓத வேண்டும்..!
அவளுக்கான தண்டனைகளும் அங்கேயே நிறைவேற்றப்பட வேண்டும்..!
இதுபோல் அவன் அளவு கணக்கின்றி சேர்த்து வைத்துள்ள கனவுகள் அத்தனையும் நனவாக, அவன் ஆசைகள் அனைத்துக்கும் ஒரே நிபந்தனையாகிப் போன அவள் அவன் அருகில் வேண்டும்..!
ஆனால் அதற்கான எந்த சாத்தியக்கூறுகளையும் அவள் விட்டு வைக்கவில்லையே!
கருந்துளைக்குள் காதலைப் புதைத்து விட்டு, பெர்முடா முக்கோணத்துள் சென்று ஒளிந்து கொண்டவளை எங்ஙனம் கண்டுபிடித்து அவன் தன் ஆசைகளையும் ஆத்திரங்களையும் தீர்க்க?
Excited & interesting…