சித்திரமே சிறை மீட்க வா!!

சித்திரம் - 01

 
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
 நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
 சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
 நாராயணனே, நமக்கே பறைதருவான்,
 பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
ஆண்டாள் திருப்பாவையை ஆண்டாளே இறங்கி வந்து பாடினால் கூட அதில் இத்தனை உயிர் இருக்குமா என்பது சந்தேகம் தான். அவ்வளவு தித்திப்பாய் மிக மிக மெல்லிய குரலில் பாடிக் கொண்டு, புள்ளிகளை அள்ளி வைத்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் இளவரசி.
மார்கழி மாதக் குளிர் கனமான கம்பளியைத் தாண்டியும் உடலைக் கூறு போடும் அந்த அதிகாலை வேளையிலேயே தலைக்குக் குளித்து ஈரக் கூந்தலை துண்டை வைத்து முடிந்து வைத்திருந்தாள்.
அந்த நேரம் அவர்கள் வீட்டின் எதிர் வீட்டின் உரிமையாளர் ரேவதி அம்மா கேட்டைத் திறந்து வெளியே வந்தவர், இவளின் கோலத்தின் விஸ்தாரத்தைக் கண்டு பிரமித்துப் போனார்.
“இளா, நீ இப்பிடி தெருவுக்கே சேர்த்து கோலம் போடப் போறேன்னு நேத்தே சொல்லிருந்தேனா, நான் கொஞ்சம் தாமதமா எந்திரிச்சிருப்பேன்ல? வீணா இந்தக் குளிர்ல வேளையா எழும்பிட்டேன்.” என்றார் போலியாய் சலித்தபடி…
இளா அவர் பேச்சில் மென்மையாக   சிரித்தவள், “அதுக்கென்னக்கா என் கோலம் எல்லாருக்கும் பொது தான்.  யாரு வேணாலும் அவங்க வீட்டுக்குனு சொந்தம் கொண்டாடிக்கலாம். நீங்க இனிமே தாமதமாவே எழுந்துக்கோங்க.” என்றாள்.
“அடி ஆத்தி!! என்ன இளா பட்டுனு இப்பிடி சொல்லிட்ட? ஒரு பொண்ணு கோலத்துக்கு வைக்கிற புள்ளியைத் தாங்கிற மண்ணு, அவளுக்கு உரிமைப்பட்டதா இருக்கணும், இல்ல அவ உடமைப்பட்டவனோடதா இருக்கணும். நீ இப்பிடி பேசினது மட்டும் உன் பாட்டிக்கு தெரிஞ்சுச்சு உன் பாடு அவளோ தான்.” என்றதும் தன் தவறு புரிந்த இளவரசி, பதட்டத்துடன் வீட்டின் உள்ளே பார்த்தாள்.
நல்ல வேளையாக யாரும் இல்லை என்றதும் ஆசுவாசமாக உணர்ந்தவள்,  சிறு சிரிப்போடு ரேவதியுடனான அப்போதைய பேச்சுக்கு முற்றுப் புள்ளி போட்டவள், வேலையில் கவனமானாள்.
அவருக்கும் அந்த வீட்டில் அவர்கள் வாழ்க்கை முறை ஒரளவு தெரியும் ஆகையால் அவரும் அவர் வேலையோடு இருந்து விட்டார்.
ஒரு வழியாக கோலத்தை முடித்து எழுந்த இளவரசி இரண்டு நிமிடங்கள் மெனக்கெட்டு அதன் அழகை விழி வழி மனதில் நிரப்பிக் கொண்டு வீட்டுக்குள் செல்லத் திரும்பி நடந்தவள், திடீரென தன் பின்னே காற்றின் வேகம்  கூடியது போல் உணர்ந்தாள்.
என்னவென அவள் திரும்பிப் பார்ப்பதற்குள் நொடி நேரத்துக்குள்  காற்றைக் கிழித்துக் கொண்டு அவளைக் கடந்து சென்றது ஒரு ஜீப்.
விசைத்துக் கொண்டு சென்ற ஜீப்பின் பெரும் சத்தத்திலும் அது கொடுத்த அதிர்விலும் இளவரசி திகைத்து நின்று விட்டாள். இத்தனை குளிருக்கும் கூட நடுங்காத அவளின் கை கால்கள் இப்போது வெடவெடக்க ஆரம்பித்தன.
இதில் ரேவதி வேறு சும்மா இருக்காது,  “ஈஸ்வர் தம்பி ஜீப் தான அது? இந் நேரத்துக்கு இவ்வளவு அவசரமா எங்க போறாரு?” என தன் சிந்தனையை வாய் விட்டு சொன்னவர்,
“அச்சச்சோ இளா நீ கஷ்டப்பட்டுப் போட்ட கோலம் இப்பிடி ஆகிப் போச்சே!” என்று அவர் அங்கலாய்த்துக் கொள்ள,  அப்போதே குனிந்து அலங்கோலமாகி இருந்த தன் கோலத்தைக் கண்ட இளவரசியின் கண்கள் பட்டெனக் கலங்கி விட்டது.
சுரந்த கண்ணீர் தன் கன்னம் தீண்டி விடும் முன் சுதாரித்து உள்ளே ஓடி விட்டிருந்தவள், அடிபட்ட கன்றாகத் தாயைத் தேடி ஓடினாள்.
தனலட்சுமி தன் ஆஸ்தான இடமான சமையலறையில் இருக்க, தேடி வந்தவள் தாயை அணைத்துக் கொண்டு நடுங்கினாள்.
திடீரென அவளின் இந்த செயலை எதிர்பாராத தனலட்சுமி, மெல்ல அவளைத் தன்னில் இருந்து பிரித்தவர்,
“அரசி! என்னாச்சு உனக்கு? ஏன் இப்பிடி உடம்புலாம் நடுங்குது?” பதட்டமாய் கேட்டுக் கொண்டே அவள் தலையைத் தடவி விட்டார்.
“ம்மா.. நான் போட்ட கோலம் அழிஞ்சு போச்சு.” என்று மெல்ல விசும்பியபடி அவள் சொல்லக் கேட்ட தனம் ஆசுவாசமானவர்,
“இதுக்கு தான் இவ்வளோ ஆர்ப்பாட்டம் பண்ணுறியா நீ? நீ எப்பிடி தான் பார்த்துப் பார்த்துப் போட்டாலும் ஒரு கோலத்தோட ஆயுட்காலம் ஒரு நாள் தான் அரசி மா! ஆனா என்ன இதோட ஆயுள் இன்னும் கொஞ்சம் குறைவுனு ஆகிடுச்சு. இதுக்கெல்லாம் மனசைப் போட்டுக் குழப்பிக்கலாமா? கண்ணைத் துடைச்சுட்டுப் போ… போய் ஆதவனையும் மலரையும் எழுப்பி அவங்களுக்கு காபி குடுத்து அவங்களைப் படிக்க வை.” என்றார் சாதாரணமாக.
தாயின் அறிவுரைகளை மௌனமாகக் கேட்டிருந்த இளவரசி, ‘கோலத்தை நான் அழிக்கலமா. அழிச்சிட்டாங்க.’ என்று மனதோடு சொல்லிக் கொண்டவள், வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே பெரும் பாரங்களை சுமந்து கொண்டிருக்கும் தாய்க்குத் தானும் தன் சுமையை ஏற்ற மனமில்லை அவளுக்கு.
அவள் முகம் இன்னும் தெளியாததைப் பார்த்த தனம், “இன்னும் என்ன அரசி?” என்று தயவாகக் கேட்க, 
“பாட்டி வாசலைப் பார்த்தா என்ன சொல்லுவாங்களோனு இருக்கும்மா.” என்று தன் மற்றைய பயத்தை சொல்லி வைத்தாள்.
‘ஹ்ம்ம்..’ என்று மகள் அறியாது மனதோடு பெருமூச்சு விட்டுக் கொண்ட தனத்துக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இப்போதே போட்ட கோலத்தை தண்ணீர் ஊற்றிக் கழுவவும் முடியாது. அது தெரிய வந்தால் குடும்பத்துக்கு ஆகாதைப் பண்ணி விட்டீர்களே பாவிகள் என்று வானுக்கும் பூமிக்கும் துள்ளுவார் அவர் மாமியார்.
சரி என்று சிதைந்த கோலத்தை அப்படியே விட்டாலும் விடிந்ததும் அலங்கோலத்தில் விழிக்க வைத்து விட்டீர்கள் என்று அதற்கும்  வசை பாடுவார். அதை எண்ணிய மாத்திரமே மனம் துவண்டு போனார் தனம்.
பின் இதெல்லாம் இன்று நேற்றா இந்த வீட்டில் அவர்களுக்கு நடக்கிறது என்று தன்னைத் தேற்றிக் கொண்டவர், தன்னைப் பாவமாகப் பார்த்து நின்ற மகளிடம்,
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ இதை எடுத்துட்டுப் போ.” என்று தட்டை அவளிடம் கொடுக்க, டம்ளரில் இருந்த கடுங் காபியைப் பார்த்தவள் தாயைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“பால் இல்ல அரசி. அதான் கடுங் காப்பி போட்டேன். இன்னைக்கு ஒரு நாள் ரெண்டு பேரையும் சமாளிச்சுக்க சொல்லு. அப்பறம் மலர் எதுவும் சத்தம் போட்டுடப் போறா, பார்த்துக்கோ.” என்று சொல்லத் தன் வருத்தம் மறைத்துத் தலையாட்டி கேட்டுக் கொண்ட அரசி அங்கிருந்து நகர்ந்தாள்.
செல்லும் மகளின் முதுகைப் பார்த்திருந்த தனம் இப்போது வெளிப்படையாகவே பெருமூச்சை வெளியேற்றிக் கொண்டவர், வெம்பிய மனதுடன் அடுப்பை நோக்கித் திரும்பி பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தார், இன்னமும் சொகுசாக கம்பளிக்குள் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு காபி தயாரிக்கவென.
தங்கள் அறைக்கு நடந்து கொண்டிருந்த இளவரசிக்கு தங்கள் நிலையை எண்ணித் தொண்டைக்குள் சுள்ளென்ற ஒரு வலி உண்டானது.
உண்மையில் பாலுக்குப் பஞ்சம் வரும்படி அப்படி ஒன்றும் அந்த வீடு வக்கற்றுப் போய் எல்லாம் இல்லை. ஆனாலும் தினம் ஏதோ ஒன்றில் அவர்கள் நால்வர்  மட்டும் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற மாறாத நியதியின் கீழ்,  இன்று அவர்களுக்கான பாலை ரத்து செய்து விட்டிருக்கின்றனர் என்று அவளுக்குப் புரிந்தது.
அவர்கள் வீட்டில் இவர்களுடன் சேர்த்து மொத்தம் எட்டுப் பேர். தெய்வானை,  இளவரசியின் தந்தையின் தாய். அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் அவளின் தந்தை திருநாவுக்கரசு. இப்போது உயிரோடு இல்லை. இவர்களின் இந்த இழி நிலைக்கு காரணமும் அது தான்.
தெய்வானையின் இரண்டாவது மகன் அறிவானந்தம், அவர் மனைவி சாவித்திரி, அவர்கள் மகள் நித்திலா என்று ஒரு கூட்டுக் குடும்பமாய் ஒரே வீட்டில் தான் எல்லோரும் வசிக்கின்றனர் என்றாலும் அந்த வீட்டில் குறிப்பாக தெய்வானையிடம் இவர்கள் நால்வரைக் காட்டிலும் மற்றையவர்கள் ஸ்தானம் உயர்ந்தது.
காரணம் சாவித்திரியின் பிறந்த வீட்டின் செல்வ செழிப்பு. மூத்த மகன் ஒன்றுமே இல்லாத தனலட்சுமியைக் காதல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதில் வெதும்பிப் போன தெய்வானை இரண்டாவது மகனுக்கு பார்த்துப் பார்த்து வசதியில் உயர்ந்த  இடத்தில் சம்பந்தம் பேசி முடித்தார்.
திருநாவுக்கரசு உயிருடன் இருக்கும்போதே ஒன்றுமில்லாத மருமகளுக்கும் பொன் பொருளோடு வந்த மருமகளுக்கும் இடையில் வேற்றுமை பாராட்டி வந்த தெய்வானை, மகன் இறந்து விட்ட நிலையில் தனத்தோடு சேர்த்து அவர் பிள்ளைகள் மூவரும் தன் பொறுப்பின் கீழ் என்றான பின் இன்னுமே வேற்றுமை காட்ட ஆரம்பித்து விட்டார்.
இளவரசி தான் அவருக்கு முதல் பேத்தி. அவளுக்கு அடுத்து இரண்டு வருடம் கழித்து பிறந்தவள் நித்திலா. அவளுக்கும் இரண்டு வருடம் கழித்து பிறந்தவள் இளவரசியின் தங்கை மலர்விழி. மலர்விழி இன்னும் இரண்டே மாதங்களில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதப் போகிறாள். இவர்களுக்கெல்லாம் கடைக்குட்டியாக இளவரசியின் தம்பி ஆதவன். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
அவன் பிறந்த ஒரு வருடத்திலேயே திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்து விட்டிருந்தார். இளவரசி ஏழு வயது வரை தகப்புனுடன் இருந்தவள் ஆகையால் அவரை ஓரளவுக்கு அறிவாள். மலருக்கு கூட நிழலாய் தந்தை முகம் நினைவில் இருக்கிறது. ஆனால் ஆதவன் தந்தை என்ற உறவின் உயிர்ப்பான நினைவுகள் கூட அறியாதவன். ஆதலால் தான் அதற்கு நிகராக தாய், தமக்கைகள் இருவரும் அவனை அந்த ஏக்கம் அண்ட விடாதபடிக்கு அரவணைத்துக் கொள்வர்.
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவர்கள் அத்தனையும் தாங்கி வாழ உரம் கொடுப்பது நால்வருக்குள்ளும் இருக்கும் பாசப் பிணைப்பு ஒன்றே ஆகும். கூடவே தனம் என்ற பெண்மணியின் சகிப்புத்தன்மையும் தியாகமும்.
இதையெல்லாம் கசப்பாக எண்ணிக் கொண்டே தங்கள் நால்வருக்கு என்று அந்த வீட்டில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட அந்த ஒற்றைப் படுக்கையறைக்குள் நுழைந்த இளவரசியின் மனதில் அதுவரை இருந்த சஞ்சலம் எங்கோ பறந்து சென்று விட்டிருந்தது.
திசைக்கொன்றாய் உறங்கும் தம்பி மற்றும் தங்கையைப் பார்த்ததும் இதழில் தானாகவே ஒரு முறுவல் தோன்ற இருவருக்கும் எட்டாத இடத்தில் கொண்டு வந்த தட்டை வைத்தவள், இருவரையும் உசுப்ப ஆரம்பித்தாள்.
“மலர், ஆதவா! ரெண்டு பேரும் எந்திரிங்க. காபி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படிங்க.” என்ற ஆதவன் உடனே எழுந்து கொண்டு விட்டான்.
ஆனால் மலர் எட்டித் தமக்கையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு உறக்கத்தைத் தொடர, இளவரசி வலிக்காது அவள் கையில் லேசாக அடித்தவள்,
“சின்னப் பையன் அவனே எந்திரிச்சிட்டான். உனக்கு சொகுசா என் மடில தூக்கம் கேக்குதா?” என்று அவளை விலக்கி விடுவது போல் தள்ள இன்னும் இறுக்கமாக அவளோடு ஒட்டிக் கொண்டவள்,
“அவனையும் விட நீ தான் ரொம்ப சின்னப் பொண்ணு மாதிரி இருக்க. நீ ஏன் இவளோ சீக்கிரம் எந்திரிச்ச?” என்றாள் உறக்கக் குரலில்.
“அக்கா என்ன உன்னை மாதிரியா சின்னக்கா, என்னை யாரு கேப்பான்னு இருக்க? இன்னைக்கு மார்கழி மாசம் ஆரம்பிக்குதுல, அதான் அக்கா,  பாட்டிக்கிட்ட திட்டு வாங்காம இருக்க,  வெள்ளனவே எந்திரிச்சுக் கோலம் போட்டுருப்பா.” தமக்கையை அறிந்தவனாக ஆதவன் சொல்ல, இளவரசி அவனை ஏன்டா என்பது போல் பார்த்தாள்.
அவளுக்குத்தான் தெரியுமே இதைக் கேட்ட அடுத்த நொடி தங்கை சூரியமுகி ஆகி விடுவாள் என்று.
அவள் எண்ணியது பொய்க்கவில்லை, மலர் அவள் மடியில் இருந்து பட்டென எழுந்து கொண்டவள், தமக்கை முறைத்தாள்.
“நீயெல்லாம் திருந்தவே மாட்டில? எல்லாம் நம்மைப் பெத்தத சொல்லணும். இந்த அம்மா உன்னையும் அவங்களை மாதிரியே ஆக்குறேன்னு நிக்குது. ஆனா அதுக்கு ஒருக்காலும் நான் விட மாட்டேன். அந்தக் கண்ணு கட்டையா போன கிழவிக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியா வாசல்ல கோலம் வேணும்னா, அது தேடித் தேடிக் கொண்டு வந்துச்சே ஒரு மகாராணிய மருமகளா, அதைக் குந்தி இருந்து போட சொல்ல வேண்டியது தான? அப்பிடியாச்சு என் அம்மா சமைச்சுக் கொட்டக் கொட்ட உக்காந்து சாப்டதுல அது இடுப்புல ஏறி உக்காந்த லாரி டயர் தேஞ்சு ஒரு ஷேப்கு வருதானு பார்க்கலாம். அதை விட்டுட்டு நீ படிச்சு முடிச்சதும் உன்னையும் முழு நேர சர்விஸ்க்கு சேர்க்கப் பார்க்குறாங்களா? மரியாதையா நீ நாளைக்கே ஏதாச்சும் கோர்ஸ்ல போய் சேருற. இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டை விட்டுக் கிளம்புற வழியைப் பாரு.” என்று சீறியிருந்தாள்.
இளவரசிக்கு அவள் பேசுவதில் இருந்த நியாயத்தை விட, அவள் பேசுவதை யாரும் கேட்டு விடுவார்களோ என்ற பயமே பிரதானமாக இருக்க, பதட்டத்துடன் வெளியே  எட்டிப் பார்த்தவள், யாரும் இல்லை என்றதும் ஆசுவாசமடைந்தாள்.
“அடி வாங்கப் போற மலர்! வர வர உன் பேச்சுல கொஞ்சம் கூட மரியாதையே இருக்க மாட்டேங்குது. பெரியவங்களை இப்பிடியா பேசி வைப்ப? இதுலாம் நல்லதுக்கு இல்ல சொல்லிட்டேன்.” என்றாள் அக்காவாய் கண்டிப்புடன்.
“நான் அவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னா, அவங்க நம்மளுக்கு மரியாதை குடுக்கணும். இல்லாம சும்மா அவங்க வயசுக்குலாம் மரியாதை குடுக்க என்னால முடியாது.” என்று மூக்கு விடைக்க சொன்னவள், தமக்கை தன்னைப் பேசி விட்ட கோபத்தில் விசைத்துக் கொண்டு எழுந்து, அங்கே, அந்த அறைக்குள்ளே கட்டப்பட்டிருந்த கொடியில் மடித்துப் போடப்பட்டிருந்த தன் உடைகளில் கைக்குக் கிடைத்ததை விறு விறுவென உருவிக் கொண்டு, தங்கள் அறைக்கு எதிரே இருந்த கொல்லைப் புறக் குளியலறை நோக்கிப் போனாள்.
“டி மலர், காபி கூட குடிக்காம அங்க எங்கேடி போற? தண்ணி ரொம்ப ஜில்லுனு இருக்கும். இரு நான் வந்து  சுடுதண்ணி கலந்து தரேன்.” என்ற எந்தப் பேச்சையும் காது கொடுத்துக் கேட்டாளில்லை. மடமடவென தண்ணீர் அள்ளி மேலுக்கு ஊற்றும் சத்தம் தான் இவர்களுக்குக் கேட்டது.
அதில் கவலையான இளவரசி, “டேய் என்னடா இவ இப்பிடி இருக்கா?” என்று தம்பியிடம் கவலையாக கேட்க, அவனோ,
“எனக்கும் அவ பேசறது தான் சரியா இருக்குனு தோணுதுக்கா. எனக்கும் இங்க எதுவுமே பிடிக்கல. நம்ம வேற எங்கேயாச்சும் வீடு பார்த்துப் போய்டலாமாக்கா?” என்றான் சிறு பிள்ளையாய்.
அவன் முகம் கண்ட இளவரசிக்கு கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது. அந்த வீட்டுக்கு ஒற்றை ஆண் வாரிசு அவன். இளவரசனாக வளர வேண்டியவன் இருக்கும் இடத்தை வெறுத்து வாழ்கிறான். அதுவும் வெறும் பதின்நான்கே வயதான நிலையில்.
தன்னைக் கட்டுப்படுத்தி தம்பியின் தலையைத் தடவிக் கொடுத்த இளா,
“நீ ரொம்ப சின்னப் பையன் டா ஆதவா! அதான் அம்மா என்ன நடந்தாலும், ஏன் இங்கயே இருக்க நினைக்கிறாங்கனு  உனக்குப் புரிய மாட்டேங்குது. நம்ம இங்க இருக்கிறது தான் நமக்கு ரொம்ப ரொம்ப நல்லது. சின்ன சின்ன விஷயத்துக்குலாம் ரோஷம் பார்த்திட்டு இங்க இருந்து போனோம்னு வை, நீ எதிர்பார்க்காத அளவுல நமக்குக் கஷ்டம் வரும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் அதெல்லாம் என்னனு உனக்கே புரியும்டா. அது வரைக்கும் மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம படிப்புல மட்டும் கவனமா இருக்கணும். ஏன்னா நீ படிச்சு பெரிய வேலைல சேர்ந்த அப்பறம் தான், எங்களை எல்லாம் இங்க இருந்து வேற வீட்டுக்கு கூட்டிப் போலாம் சரியா?” என்ற,
ஆதவன் தமக்கையின் வார்த்தைகளை கவனமாகக் கேட்டுக் கொண்டவனுக்கும் எதுவோ புரிந்தது. கூடவே இங்கிருந்து கிளம்பினால் இதை விட பெரிய பிரச்சினைகள் வரும் என்ற தமக்கை கூற்று மனதை அசைக்க சரி என்று தலையாட்டினான்.
“என் சமத்து தம்பி.” என்று அவள் அவன் தலையை கலைத்து விட, அவன் மலர்ந்து சிரித்தான். இந்த சிரிப்பு அவனிடம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று தோன்றியது இளவரசிக்கு.
“சரி ஆதவா, நீ போய் பல்லு விளக்கிட்டு வா. நான் காபிய சூடு பண்ணி எடுத்துட்டு வரேன். உள்ள ஒருத்தி கோபத்துல பச்சைத் தண்ணிய அள்ளி அள்ளி ஊத்திட்டு இருக்கால்ல, அவ வெளில வந்தா அவளைத் தலைய நல்லா துவட்டிக்க சொல்லு, நான் சாம்பிராணி புகை போட்டு எடுத்துட்டு வரேன்.”
“சரிக்கா” என்றபடி அவன் எழுந்து கொள்ள இவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்றாள்.
                                                            ******************
ஒரு அறை கூடம் என்று இருந்த சிறிய ஓட்டு வீட்டின் முன் திண்ணையில் அமர்ந்திருந்தான் நீலன். நொடிக்கொருதரம் வீட்டின் கூடத்தினுள் பார்வையை செலுத்தியவாறே இருந்தவன், ஈஸ்வரின் ஜீப் சத்தம் கேட்டதும் அவசர அவசரமாய் எழுந்து அவனை நோக்கி ஓடினான்.
ஜீப்பில் இருந்து நிதானமாக இறங்கிய ஈஸ்வர் கண்களை சுழற்றி சுற்றுச்சூழலை கவனமாக ஆராய்ந்தான். இருள் முழுதாய் விலகி இருக்காத அதிகாலைப் பொழுது அது. உடலை தைக்கும் குளிரால் ஊரே வீட்டினுள்ளடங்கி இருக்க, இவன் மட்டும் தன் ஊர் தாண்டி பக்கத்து ஊரில், ஊரை விட்டுத் தள்ளி வாழும் ஒரு பரத்தை பெண்ணின் வீட்டின் முன்னால்.
இவனோடு சேர்ந்த பாவத்துக்கு தான், மனதின் போராட்டங்களை சகித்துக் கொண்டு நீலனும் அங்கே இவ்வளவு நேரம் தேவுடு காத்திருந்தான்.
“அண்ணா!!” என்றவன் அழைப்பைக் கேட்டு, அவனிடம் பார்வையைக் கொண்டு வந்த ஈஸ்வரிடம்,
“இ… இதெல்லாம் உங்களுக்கு வேணுமா ண்ணா? இதுக்குன்னே ஆளுங்க இருக்கும் போது…” என்று தயங்கித் தயங்கிப் பேசியவன், ஈஸ்வரனின் கூர்ப் பார்வையில் வாயை மூடிக் கொண்டான் நீலன்.
ஈஸ்வர் அவனை அழுந்தப் பார்த்தவன், ஜீப்பைப் பார்க்கவும், நீலன் அவனறியாது மனதோடு பெருமூச்செறிந்து, வீட்டின் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு, ஜீப்பை நோக்கி நடந்தான்.
அவன் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமரும் வரை அங்கேயே நின்றிருந்த ஈஸ்வர், அதன் பின் பூட்டியிருந்த வீட்டின் கதவை சாவி கொண்டு திறந்து உள்ளே சென்றவன் உட்பக்கமாக கதவைப் பூட்டிக் கொண்டான்.
அரை மணி நேரங் கழித்து இருபது வயது கூட நிரம்பியிராத ஒரு பெண்ணை அவளின் கை, கால், வாய் என்பவற்றை துணியால் கட்டி அவள் திமிறத் திமிறத் தூக்கி வந்தவனைப் பார்த்த நீலன் அதிர்ந்து விட்டான்.
இப்போது அவன் அக்கம் பக்கம் எங்கும் கண்களை சுழற்ற, காலை மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு கிழவி மட்டும் இவர்களைப் பார்த்து விட்டிருந்தாள்.
ஆனால் வயதின் காரணமாக அந்தப் பெண்ணின் உருவம், அவளின் திமிறல் எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அதனால் அந்த வீட்டில் குடியிருக்கும் அம்சவேணியைத் தான் யாரோ தூக்கி செல்கிறார்கள் என்று நினைத்தவர்,
‘சிறுக்கி இவ இங்கருந்து போய் தொலைஞ்சா தான் பல பொம்பளைங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.’ என்று மனதில் அவளை சபித்துக் கொண்டே, நடப்பவற்றைக் கண்டும் காணாது அவர் தன் வழியில் சென்றுவிட்டார்.
எங்கே அவர் கத்தி ஊரைக் கூட்டி விடுவாரோ என்று பயந்திருந்த நீலனுக்கு அவர் அமைதியாக நகரவும் தான் மூச்சே வந்தது.
அதில் இனியும் யாரும் இவ்வழி வருவதற்குள் இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்று துரிதமாக வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன், ஈஸ்வர் அந்தப் பெண்ணை பின்புற இருக்கையில் போட்டு விட்டு முன்னால் அவன் அருகில் வந்து உட்கார்ந்ததும் உச்சகதியில் வண்டியை அங்கிருந்து கிளப்பி இருந்தான்.
அவனுக்கு இருந்த பதட்டத்தில் துளி அளவு கூட ஈஸ்வருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கூலாக அமர்ந்து தன் போனில் எதையோ பார்த்துக் கொண்டு வந்தவன் ஓரிடத்தில், “வண்டியை நிறுத்து நீலா!” என்றான்.
நீலனும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்காது, அவன் கட்டளைக்கு ஏற்ப வண்டியை நிறுத்தி இருந்தவன், அடுத்த கட்டளை என்ன என்பது போல் அவன் முகம் பார்த்தான்.
“ரெண்டு நாளைக்கு நான் ஊர்ல இருக்க மாட்டேன். எல்லாத்தையும் பார்த்துக்கோ!!” மீண்டும் கட்டளையாக வந்த வார்த்தைகளுக்கு தன்னால் தலையசைத்த நீலன், பின்னால் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்க்க, போராடிப் போராடி உடல் சோர்ந்து, வாய்விட்டுக் கதறியழ வாயில் அடைப்பட்டிருந்த துணி தடுத்ததில் மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தவள், இவன் தன்னைப் பார்ப்பதைப் பார்த்ததும் கண்களாலே இவனிடம் கெஞ்சினாள்.
அவளை பரிதாபமாகப் பார்த்த நீலன், திரும்பி ஈஸ்வரைப் பார்க்க, அவனும் அவனை அர்த்தமாகப் பார்த்தவன்,
“தானா இறகு போடாத மயிலோட இறக்கையை நம்மளா தான் புடுங்கி எடுக்கணும்..” என்றான் அலட்சியமாக…
நீலனால் அவனை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாத, செய்ய முடியாத நிலை. ஈஸ்வர் கொலையே செய்தாலும் கைகட்டிப் பார்த்திருந்து விட்டு, அந்தப் பழியைத் தான் ஏற்கும் அளவு அவனில் விசுவாசமுள்ளவன் நீலன்.
அதனால் அந்தப் பெண்ணை மறுமுறை திரும்பிக் கூடப் பார்க்காமல், அவன் வண்டியிலிருந்து இறங்க ஈஸ்வர் தானும் இறங்கிக் கொண்டவன்,  ஓட்டுநர் இருக்கைக்கு மாறினான்.
“பத்திரம் ண்ணா.” என்ற நீலனின் வார்த்தைகள் காதை அடையும் முன்னே வண்டியைக் கிளப்பி சென்றிருந்தான் ஈஸ்வர்.
தொடரும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
4.4 11 votes
Article Rating
Subscribe
Notify of
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Megalaveera
Megalaveera
14 days ago

nice start

Suheera Nusry
Suheera Nusry
13 days ago

A different opening…

error: இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.