ஊடல் 03

ஊடல் 03
சாய்வான தேயிலைத் தோட்டங்களும் வரிசைகட்டி நின்ற பைன் மரங்களும் பசுமை வேலிகளாக அரண் அமைத்திருக்க, அதன் நடுவே தனிப்பொலிவோடு காட்சி தந்தது, “உதயம் ஹயர் செகண்டரி ஸ்கூல்” 
அன்றாடக் கூலிகளாக, வாழ்க்கைப்பாட்டைக் கவனிப்பதே பெரும்பாடென வாழும் எஸ்டேட் தொழிலாளிகளின் குழந்தைகளின் கல்வி எழுச்சிக்காய், தற்போதைய பள்ளியின் தலைவரான உமையம்மையின் தந்தையான திருநீலகண்டனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு சிறிய ஓட்டுக் கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி 
பின்னர் படிப்படியாக வளர்ச்சி கண்டு, இப்போது சகல வசதிகளுடன் கூடிய கல்வி நிலையமாகத் தன்னை மெருகேற்றிக் கொண்டு மிளிர்கிறது. 
என்னதான் தற்போது இது ஒரு அரச உதவி பெறும் தனியார் பாடசாலையாக இருந்தாலும் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரையான பள்ளியின் ஒவ்வொரு படிநிலை வளர்ச்சியிலும் உமையம்மையின் குடும்பத்தின் பங்கு மிக அதிகமானது. 
பள்ளியின் தரத்தை இவர்கள் படிப்படியாக உயர்த்த உயர்த்த கல்வியின் தரமும் தன்னால் உயர்ந்து போனதில் எஸ்டேட் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு என்று ஆரம்பித்த பள்ளியில் இன்று பாதிக்குப் பாதி, வறுமைக்கோட்டுக்குட்பட்ட வெளி மாணவர்களும் இலவசமாகக் கல்வி பயின்று கொண்டிருக்கின்றனர்.
முற்றும் முழுதாக சேவையை மட்டுமே மையமாகக் கொண்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளியால், உமையம்மை குடும்பத்தின் மரியாதையும் நன்மதிப்பும் சுற்றுவட்டாரத்தில் முன்னிலும் பார்க்கக் கூடியிருந்தது. அது ஒன்று மட்டும் இவர்களுக்குப் பள்ளி மூலம் கிடைத்த ஒரே லாபம். 
அதைத் தாண்டி கல்வியை வியாபாரமாக்கி உழைத்து சொத்து சேர்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்கள் குடும்பத்துக்கு இல்லை. 
அவர்கள் குடும்பப் பின்னணியை பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் மேல் தவறே என்றாலும் நீங்கள் தவறு என்று யாரும் எளிதில் கைநீட்டி சுட்டிக்காட்டி விட முடியாத உயரத்தில் இருக்கும் ஊட்டியின் பேர் சொல்லும் குடும்பங்களில் உமையம்மையின் குடும்பமும் ஒன்றாகும். 
இந்தப் பெருமையை இன்று நேற்று சம்பாதித்து விடவில்லை. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு இந்த மரியாதை இவர்களைப் பின்தொடர்ந்து வருகிறது.
திருநீலகண்டனின் தந்தை ஜீவநாயகம், *** என்று அன்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டிருந்த இன்றைய உதயம் எஸ்டேட் ஓனரான பிரிட்டிஷ் துரையிடம் எஸ்டேட் மேனேஜராகப் பணிபுரிந்தவர். 
துரையின் நம்பிக்கையான வலது கையாகவும் இருந்தவர். 
ஜீவநாயகம், தன் ஆரம்பக் கல்வியை மிஷனரி பாடசாலை ஒன்றில் ஆங்கிலவழியில் கற்றுத் தேர்ந்தவர், தொடர்ந்து கல்வி மேல் இருந்த மோகத்தில் முயன்று பட்டயக்கல்வியை முடித்திருந்தார். 
அவரின் அந்தக் கல்வித் தகுதியும் சரளமான ஆங்கிலப் புலமையுமே அவருக்கு அந்த மாதிரி ஒரு உயர்ந்த பதவியை பெற்றுக் கொடுத்திருந்தது. மனிதர் சமயோசிதபுத்தியிலும் கை தேர்ந்தவர். 
என்னதான் பிரித்தானிய துரையிடம் வேலை செய்து அவருக்கு விசுவாசமாக இருந்தாலும் தன்னால் முடிந்தளவு எளிய மக்களுக்கு பெற்றுத்தர முடிந்த எல்லா நன்மைகளையும் துரையிடம் நைச்சியமாக எடுத்துக் கூறி, பெற்றுத் தந்து விடுவார். 
அதன் பின் தொழிலாளர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு, துரையிடம் சொன்னது போல் அந்த மாத லாபத்தில் சிறிதளவு முன்னேற்றத்தையும் காட்டிவிடுவார்.   
இப்படி இரு பக்கமும் நல்ல பேரை சம்பாதித்து வைத்திருந்தவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மற்றவர்களைப் போல் இவன் துரையும் தன் எஸ்டேட்டை விற்க முனைந்தவேளை, அதை வாங்குவதில் தனக்கு விருப்பம் உள்ளதைக் கூறி, தான் இதுவரை சேமித்து வைத்தவை, ஊரிலிருந்த சில ஏக்கர் பூர்வீக நிலங்களை விற்ற பணம் எல்லாவற்றையும் எடுத்து வைக்க, அந்தப் பணம் அவர் விற்கப் போகும் சொத்துக்கு ஈடாகாத போதும், ஜீவநாயகம் மேலிருந்த நன்மதிப்பினாலும் அவர் காட்டிய விசுவாசத்திற்கு பரிசாகவும் அவர் கொடுத்த தொகைக்கு எஸ்டேட் மற்றும் அப்போதே சிறிதளவில் ஆரம்பித்திருந்த தேயிலைத் தொழிற்சாலையையும் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இருந்தார் துரை. 
ஏற்கனவே அவருக்கு பழக்கப்பட்ட எஸ்டேட், மற்றும் தொழிலாளிகள் என்பதால் ஜீவநாயகம் மிகக் குறைந்த காலத்திலேயே தொழிலில் துரித முன்னேற்றம் கண்டு, தன் வம்சத்துக்கு ஊட்டியில் நிலையான ஒரு ஸ்தானத்தை உருவாக்கி விட்டிருந்தார். 
அவருக்கு அடுத்து வந்த அவரின் ஒற்றை மகன் திருநீலகண்டனாகட்டும் திருநீலகண்டனின் ஒற்றை மகள் உமையம்மை ஆகட்டும் இருவருமே அவர் உருவாக்கி கொடுத்த பேரையும் புகழையும் அடுத்த கட்டத்திற்கு வளர்த்தி சென்றனரே தவிர, எங்கும் தங்கள் குடும்பப் பாரம்பரியத்தை குன்றவிடவில்லை. 
இனி அதை அப்படியே எடுத்த செல்ல வேண்டியது உமையம்மையின் நான்கு பிள்ளைகளின் கடமை. இந்த விஷயத்தில் முதல் மூன்று பெண்பிள்ளைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை உமையம்மைக்கு. திருமணம் ஆகி அவர்களுக்கு என்று பிள்ளைகளாகி விட்ட பின்னும் கூட தாயின் சொல்லுக்கு மறுசொல் பேசமாட்டார்கள் மூவரும். அதனாலேயே மூவர் மேலும் அசையாத நம்பிக்கை உண்டு அவருக்கு. 
யுவா மேலும் நம்பிக்கை உண்டு தான், நிச்சயமாக வேண்டாத வேலைகள் தான் பார்த்து வைப்பான் என்று!  
**************************
ரேணுவை அவள் கற்கும் கல்லூரியில் இறக்கி விட்டு விட்டு உதயம் ஸ்கூல் முன்பு வந்து ஜீப்பை நிறுத்தினான், யுவா. 
அவன் வந்த நேரம், காலை பிரேயர் முடிந்து பள்ளியின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தொடங்கியிருந்தன. ஆதலால், வாயில் கேட் பூட்டப்பட்டிருந்தது. 
இவன் ஜீப் வந்து நின்றது கண்ட காவலாளி விரைந்து வந்து அந்தப் பெரிய இரும்புக் கேட்டைப் பிரயத்தனப்பட்டுத் திறந்து விட்டவர், மரியாதையான உடல்மொழியைக் காட்டி ஓரம் நிற்க, 
அவருக்குப் புன்னகையுடன் கூடிய சிறு தலையசைப்பைக் கொடுத்து பதில் மரியாதை செலுத்தி விட்டு, ஜீப்பை பள்ளி வளாகத்துக்குள் மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்றவன், 
காம்பவுண்ட் சுவரோடு ஒட்டி அமைந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு தனது அலுவலக அறை நோக்கி நடந்தான். 
சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் “U”வடிவில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மாடிக் கட்டத்தின் “U” வடிவத்தின் வளைந்த பகுதியின் மத்தியில் பள்ளியின் மொத்த இடப்பரப்பையும் ஓரிடத்தில் இருந்தே கண்காணிக்கக் கூடியவாறு அமைந்திருந்தது தாளாளர் அலுவலகம். 
கடந்த நான்கு வருடங்களாக அந்த அறைக்கும் பதவிக்கும் சொந்தக்காரனாக யுவா தான் இருந்து வருகிறான். இருத்தப்பட்டு வருகிறான் என்று கூட சொல்லலாம். 
தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்று காரணமே சொல்லாமல் யூகே மண்ணை விட்டு வரவே மாட்டேன் என்று நின்றவனை, உமையம்மை தான் அவன் பொறுப்புகளை சுட்டிக்காட்டி, பிளாக்மெயிலுக்கும் எமோஷனல் பிளாக்மெயிலுக்கும் இடைப்பட்ட ஒன்றை செய்து ஊட்டிக்கு அழைத்து வந்தவர், அவன் இங்கிருந்து நகர முடியாதபடிக்கு பொறுப்புகளை அவன் தலையில் ஏற்றி விட்டுத் தான் வெறும் மேற்பார்வையும் ஆலோசனையும் தான் என்று போக்குக் காட்டி ஒதுங்கி விட்டார்.
யார் வாழ்வையும் அழித்துப் பிழைக்காத பரம்பரை ரத்தம் அவன் உடம்பிலும் ஓடுவதாலேயோ என்னவோ, தன் தனிப்பட்ட துன்பங்களை தனிமையில் அனுபவித்துக் கொண்டு, கடமைகளுக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்து வாழ்ந்து வருகிறான்.
அவனை அன்றாடம் சந்தித்துப் பேசும் யாருக்கும் அவன் மனதில் இருக்கும் வெறுமையும் அது கொடுக்கும் வேதனையும் தெரிய வாய்ப்பே இல்லை. 
ஏன் வெளியாட்களை சொல்லிக்கொண்டு? வீட்டில் இருக்கும் தாய் தமக்கைக்குக் கூட அவன் உள்ளத்தின் ஓலங்கள் இன்றுவரை தெரிய வரவில்லை. 
அதற்குக் காரணம், இயல்பான அவனின் துடிப்பான குணமாகாவும் இருக்கலாம். இல்லை, தன் மனசாட்சி தவிர்ந்த மற்றையவர்களிடம் நடிக்கக் கொண்டதாகக் கூட இருக்கலாம்.  
ஆனால், பார்ப்பவர்கள் எல்லோரும் யுவாவா? அவனுக்கு என்ன குறை இருக்கப் போகுது? என்று கேட்கும் வகையில் தான் இருப்பான் அவன். 
தன் அலுவலக அறையின் இருக்கையில் வந்தமர்ந்த யுவாவுக்கு, அதன் பின் வேறு எதைப் பற்றியும் சிந்தனை செல்லவில்லை. 
மேஜையில் தனக்காக காத்திருந்த கோப்புகளை எடுத்து ஆராயத் தொடங்கினான். 
சென்ற மாத ஆசிரியர் சம்பள அறிக்கையை சரி பார்த்து கையொப்பமிட்டவன், அதை ஸ்கேன் செய்து சாஃப்ட் காப்பியை மெயிலில் அனுப்பி வைத்து விட்டு, ஹார்ட் காப்பியை தனியாக எடுத்து வைத்தான்.  
அடுத்து ஹெட்மாஸ்டர் வெரிஃபை செய்து அனுப்பி வைத்த, டிஈஓ இல் இருந்து வந்த குவாட்டர்லி எக்ஸாம் பேப்பர் பிரிபரேஷன் தொடர்பான சர்க்கிளரை படித்துப் பார்த்து ஒப்பமிட்டவன், அதைத் தொடர்ந்தும் சில ஃபைல்களைப் பார்த்து முடிக்க, ஒரு மணி நேரம் சட்டெனப் பறந்திருந்தது. 
எல்லாம் முடிந்ததும் இறுதியாக பியூனை தொலைபேசியில் அழைத்தான்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்!”
“கம் இன்”
“சார்!” 
“சண்முகம்! இதுல இருக்க சர்க்கிளரை அந்தந்த சப்ஜெக்ட் டீச்சர்ஸ்கிட்ட கொடுத்துடுங்க. தென் இந்த ஹார்ட் காப்பியை டிஈஓ ல நேரா போய்க் கொடுத்துடுங்க. கேர்ஃபுல்… போஸ்ட்ல போட்டுட வேணாம். லாஸ்ட் டைம் போஸ்ட் போய் சேர டிலே ஆகிடுச்சு.” 
“ஓகே சார். இன்னைக்கே கொண்டு போய் குடுத்துடுறேன்” 
“ம்ம்.. வேற ஏதாவது நான் பார்க்க வேண்டியது இருக்கா?”
“நத்திங் சார். பிரின்சிபால் சார் தான் உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு. நான் போய் நீங்க வந்துட்டீங்கனு சொல்லுறேன்.” 
“இட்ஸ் ஓகே. நான் ஒர்க் முடிச்சிட்டேன். நானே அவரைப் பார்த்துட்டுக் கிளம்புறேன்.” என்று எழுந்துகொள்ள, அவரும் “ஓகே சார்.” என்று வெளியேறினார். 
யுவாவும் பிரின்சிபாலை சந்தித்துப் பேசிவிட்டு, பள்ளியை முழுவதுமாக ஒரு ரவுண்ட் அடித்து விட்டு மீண்டும் ஜீப்பில் ஏறிப் பயணப்பட்டான். 
இந்த நாளில் இனி சூரியன் மறையும் வரையான நேரங்கள் எல்லாம் அவனுக்கு எஸ்டேட்டிலும் ஃபேக்டரியிலும் தான் கழியும். 
இப்படி அவன் ஒளி அலை வேகத்தில் ஓடிக் கொண்டே இருப்பதால் தான் ஓரளவேனும் அவன் காதல் கிழத்தியின் நினைவுகளின் வேகத்தை மட்டுப்படுத்த முடிகிறது. 
இல்லையென்றால் லண்டனில் ஒருவாரமாகப் பிச்சைக்காரனை விடக் கேவலமாகப் பித்துப் பிடித்து அலைந்த நிலை தான் இங்கும் தொடர்ந்திருக்கும். 
தெரிந்தோ தெரியாமலோ உமையம்மை அவனைப் பொறுப்பாக்கிறேன் பேர்வழி என்று பைத்தியக்காரன் ஆகாமல் காப்பாற்றி விட்டிருந்தார். 
பழக்கப்பட்ட வாகனமும் பழக்கப்பட்ட பாதையும் ஒன்று சேர்ந்ததில், யுவாவின் கவனம் வண்டி ஓட்டுவதில் அதீதமாய் படியாது, திசையறியாது பயணிக்கும் தன் வாழ்க்கை ஓடத்தின் மீது திரும்பியது. 
“கோர்ஸ் முடிஞ்சதும் உன்னை அப்படியே எங்க ஊருக்குக் கடத்திட்டுப் போயிடுவேன். இங்க மாதிரியே உன்னைக் கைக்குள்ள வச்சுட்டு ஊட்டி முழுக்க ஒருதடவை சுத்திப் பார்த்து, அங்க இருக்கிற குளிருக்கும் நீ கதகதப்பா இருப்பியானு ஒன்ஸ் செக் பண்ணிப் பார்க்கணும். குவாலிட்டி எதுவும் பிரச்சனைனா, அம்மாகிட்ட சொல்லி வேற நல்ல ஹை டெம்பரேச்சர்ல ஒரு பொண்ணைப் பார்க்க சொல்லணும்” 
படித்துக் கொண்டிருந்தவள் மடியில் வம்படியாகத் தலையை வைத்துக் கொண்டவன், அதன் பின்னும் அவள் அவனைக் கண்டு கொள்ளாமல் புத்தகத்திலேயே கவனம் வைத்திருக்க, வேண்டுமென்றே அவளை சீண்டினான். 
அவன் எதிர்பார்த்தபடியே அவளும் கொலைவெறியாகி முறைத்தவள், போட்டு அடி வெளுத்திருந்தாள். 
“நீ கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு தேடறியா, இல்ல ஹீட்டர் தேடறியா? பேசாம உங்கம்மாகிட்ட கேட்டு நல்ல பிராண்ட் ஹீட்டரா வாங்கி, அதுக்குத் தாலி கட்டிக்கோ. உனக்கு அதுதான் சரி.” என்று மொத்தி எடுத்தாள்.  
அப்போதும் வாய் அடங்காது, “ஹீட்டரையா? பட் கிஸ் பண்ணா ஷாக் அடிக்குமே பேபி?” என்று அவள் பிபியை ஏற்றிவிட்டுப் பின் தானே, 
“பரவால்ல விடு. உன்னைக் கிஸ் பண்ணும் போதும் அதே ஷாக் தானே உடம்புல பாயுது. சோ நான் மேனேஜ் பண்ணிப்பேன்! நீ கொஞ்சம் பிராக்டிஸ் மட்டும் குடு வா!” என்று அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டு அவள் திமிறத் திமிறத் ஒரு காதல் நாடகத்தை அரங்கேற்றி முடித்திருந்தானே! 
‘உன்கூட சேர்ந்து இந்த ஊர்ல ஒருநாள் கூட ஸ்பெண்ட் பண்ணல. ஆனாலும் இங்க திரும்புற இடம் எல்லாம் உன்னை ஞாபகப்படுத்துற மாதிரி உன்னை இந்த இடத்தோட பொருத்திப் பேசியிருக்கேன். நீ ஏன் டி அப்பிடி எதையும் ஷேர் பண்ணல? 
நீயும் இப்பிடி எதையும் பேசித் தொலைச்சிருந்தா, இன்னைக்கு நான் உன்கிட்ட பேசினத நினைச்சு ஏங்கிக்கிட்டிருப்பேனா? உன்னைத் தூக்கிட்டு வந்து பேசின அத்தனையையும் நிஜமாக்கி இருப்பேனேடி?
நான் நினைக்கிற மாதிரி நீயும் என்னை நினைச்சிட்டு இருப்பியாடி? இல்ல, இந்நேரம் எவனையாச்சும் கல்யாணம்…’ என்று அதற்கு மேல் சிந்திக்க முடியாமல், 
நோ… நீ அப்பிடி பண்ணியிருக்கமாட்ட. பண்ணவும் கூடாது. ஒருவேளை அப்பிடிப் பண்ணியிருந்தேனா, உன் ஆயுள் முடியுற கடைசிநாள் வரைக்கும் என் கண்ணுல பட்டுடவே பட்டுடாதடி. மீறிப் பட்டா அநியாயமா செத்துப் போயிடுவ!’ 
ஏதோ நேரில் அவளைத் தாலி, குங்குமத்துடன் இன்னொருவன் கைகோர்த்து நிற்பதைக் கண்டுவிட்டவன் போல், தாடை இறுகப் பல்லைக் கடித்து, ஸ்டியரிங்கில் ஓங்கிக் குத்தினான். 
***************************“வணக்கம் ஆன்டி.. வணக்கம் அங்கிள்.. ஹாய் ஸ்டீபன்..”
மலர்ந்து புன்னகைத்தபடி வணக்கம் வைத்தவளை ஆராய்ச்சியாகப் பார்த்தார் மைக்கேல். 
அவளுக்கு சிறு தலையசைப்பைக் கூடத் தராத அவர் செயலில் அவள் முகம் மாறாது காக்கப் பெரும்பாடு பட, அதற்கு ஈடு செய்வது போல் அவரின் மகன் ஸ்டீபன் மற்றும் மனைவி மேரி இருவரும் புன்னகையோடு அவளுக்கு பதில் வாழ்த்துரைத்தனர்.
“மெர்லின் எப்பிடிடா இருக்க? உன்னைப் பார்க்கவே முடியிறதில்லை.” என்ற மேரிக்கு மெர்லின் பதில் சொல்லும் முன், 
“எங்க மேரி, அவ வீட்ல இருந்தா தான? எந்நேரமும் வேலை வேலைன்னு வேலையைக் கட்டிக்கிட்டே ஓடிட்டு இருக்கா. வேலைன்னு வந்துட்டா அப்பா, அம்மா நாங்களே அவ கண்ணுக்குத் தெரிய மாட்டோம்? இதுல எங்கிருந்துமா உன் கண்ணுல அவ பட?” என்று சிரித்தபடி கேட்டிருந்தார் ஜோசப்.
மெர்லின் அமைதியான புன்னகையில் அவரை ஆமோதித்தாள்.
“வேலை எல்லாம் எப்போவும் இருக்கிறது தான். அதுக்காக காலா காலத்துல பண்ண வேண்டியதை பண்ண வேணாமா? ஜென்சிக்கு ஒரு அடி போட்டா தான் எல்லாம் சரியாகும். பொண்ணுக்கு செல்லத்தை மட்டும் குடுத்து வளர்த்தா போதாது, சில விஷயத்தை அழுத்தமா சொல்லிப் புரியவும் வைக்கணும்.” குறையாய் இல்லாமல் அக்கறையாய் தான் சொன்னார் அவர்.
ஆனால் அதைக் கேட்ட ஜென்சிக்குத் தான் உள்ளே ஒருவிதமாய் அழுத்தியது. மகளின் முகத்தைத் திரும்பிப் பார்த்தார். அவள் முகத்தில் இருந்த புன்னகையில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதைப் பார்க்க இன்னுமே மனம் பாரமாவது போல் இருந்தது அவருக்கு.
“மேரி! வந்த விஷயத்தைப் பேசாம என்னென்னவோ பேசிட்டிருக்க? கேட்க வேண்டியதைக் கேளு.” கல்லைக் கடித்து விட்டவர் போல் மைக்கல் குரல் காந்தலாய் ஒலித்தது.
மேரியும் உடனே, “இதோங்க..” என்றவர் மீண்டும் மெர்லினிடம்,
“இந்தக் கல்யாணத்துல உனக்குப் பரிபூரண சம்மதம் தானேடா மெர்லின்? உன் மனசுல சின்னதா எதுவும் நெருடல் இருந்தா கூட சொல்லிடு. நாங்க அதை என்னனு பார்க்கிறோம். ஜோசப் அண்ணா உன் மனநிலை என்னனு தெளிவா சொன்னாரு தான். ஆனாலும் எங்களுக்கு உன்னோட வாய்மொழில கேட்கணும். உனக்கு இதுல எதுவும் மனஸ்தாபம் இருக்காடா?” அவள் கையைப் பிடித்துத் தடவிக் கொடுத்தபடி அன்பு வழியும் குரலில் கேட்டார். 
ஜென்சி கூட இதுவரை இப்படி ஒரு குழைந்த குரலில் அவளிடம் பேசியதில்லை. 
மேரி.. இறையின் தாய் பெயர். அந்தப் பேருக்கு ஏற்றது போல் இந்த மேரியும் அன்பின் ஆலயமாக மிளிர்பவர். 
தன் கண்ணைக் குத்தி விட்டு ஓடுபவனைக் கூட பார்த்துப் போப்பா என்று சொல்லும் அளவுக்கு கருணையின் பிறப்பிடம் அவர். 
அவரின் அந்த அன்பில் மயங்கித் தானே எதையும் யோசிக்காமல், அவர் வீட்டில் சென்று வாழ வேண்டும் என்ற ஆசையை வளர்த்திருந்தாள். 
மாமியாராக அவர் வேண்டும் என்றால், காதல் அவர் மகன் மேல் தானே வந்திருக்க வேண்டும்? அவளுக்கு அப்படியா வந்தது? 
முற்றிலும் சம்மந்தமே இல்லாத, பொருந்தவே பொருந்தாத ஒருவன் மேல் வாழ்நாளுக்கான மொத்தக் காதலையும் நிலையாக வைப்புச் செய்துவிட்டு, மீட்க வழியின்றி திரியும்படி ஆனதே அவள் நிலை!  
‘அதை விட்டுத் தள்ளு. பிரயோசனமில்லாத சிந்தனை. இப்போது உன் பதிலை வேண்டி நிற்பவருக்கு உற்ற பதில் சொல்லு. இல்லையென்றால் மொத்தமும் பாழாகும்.’ மனது எடுத்துக்கொடுக்க,
“எனக்கு இதுல எந்தக் கஷ்டமோ மனவருத்தமோ இல்ல ஆன்டி. அவங்க… டாடியும் மம்மியும் முன்னாடியே இதைப்பத்திக் கேட்டிருந்தாங்க. அவங்ககிட்டயே என் மனசுல இருக்கிறதை தெளிவா சொல்லிட்டேன். இப்போ உங்ககிட்டயும் சொல்லுறேன். எனக்கு இந்தக் கல்யாணத்துல பரிபூரண சம்மதம்.” என்றிருந்தாள் நிறைவான புன்னகையுடன். 
அவள் பதிலில் அனைவர் முகத்திலும் நிம்மதியான புன்னகை. 
“அப்போ சரி. வெடிங் அன்னைக்கு நீயும் நானும் சேர்ந்து ஒரு டான்ஸ் போடுறோம், ஓகேவா?” மேரி உல்லாசமாய் கேட்டார்.
“ஸ்யூர் ஆன்டி. சாங் நீங்களே செலக்ட் பண்ணிடுங்க.” என்றாள் அவளும் உற்சாகமாக. 
“உன் ஜோடி கூட டூயட் ஆட வேண்டிய வயசுல, வயசான என்கூட ஜோடி போடறேன்னு இவளோ ஹேப்பியா சொல்லுறியேமா, பிட்டி கேர்ள்.” என்ற மேரி அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினார்.
ஜோடியுடன் நடனம் என்றதும் அவள் நினைவுகள் நொடியில் ஐரோப்பாக் கண்டத்துக்குத் தாவிற்று. 
“நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ..” 
‘அவன் கூட டான்ஸ்?? ம்ஹூம்..’ 
மனம் அழுத்தமாய் மறுத்தது. 
அவனுக்கு இன்னும் எத்தனை ம்ஹூம் வைத்துக் காத்திருக்கிறாளோ?
அவன் வாழ்நாளின் அதிகபட்ச எதிர்பார்ப்பு அவளுடனான திருமணம் தான். அதற்கும் இவள் ம்ஹூம் என்றால்? மனித மிருகம் ஆகிவிடுவானே யுவா!
தொடரும்..
 
4.2 5 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
error: இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.