ஊடல் 01

கண்ணாடிக்குப் பொட்டும்
வைத்தேன்… 
உன் நினைவை ஒட்டிக்
கொண்டேன்… 
காதல் இது தானா?
பாடல் வரிகள் மனதில் ஓட, சரியாகத் தன் நெற்றியின் நடுவில் வீற்றிருப்பது போல் நிலைப்பேழையில்  வைக்கப்பட்டிருந்த பொட்டின் மீதே தன்  பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் மெர்லின்.
“பொட்டு வச்சா பொம்மை மாதிரி அழகா இருக்க பேபி. இனி நீ பொட்டு இல்லாம என் கண்ணு முன்ன வரவே கூடாது. டாட்.”
சொன்னதோடு நில்லாமல் டசின் கணக்கில் டிசைன் டிசைனாக பிந்தி கார்டுகளை வாங்கி, டிரஸிங் டேபிள், அவளின் ஹேண்ட் பேக், பர்ஸ் முதற்கொண்டு திணித்தது போதாது என்று, தன் பர்ஸிலும் கூட ஒரு கார்டை வைத்துக் கொண்டு அலைந்தானே?
வேண்டாம் என்று அவள் அடி மனதில் ஆழப் புதைத்து வைத்த நினைவுகள்… கரை தேடி ஓடிவரும் அலைகளாக, அவளையும் மீறி மேலெழுந்து வந்து கொண்டே இருந்தன.
அவன் எண்ணங்கள் எப்போதும் அவள் மூச்சோடு இரண்டறக் கலந்தே இருக்கும் என்றாலும் இன்றென்னவோ அலாதியாய் அவளை சுருட்டிக்கொள்கின்றன.
அந்த மாய சிரிப்பும், மயக்கும் விழியும் இன்று அளவுக்கும் அதிகமாக அவள் பெண்மையை வெகுவாகக் கலங்கடிக்கின்றன.
‘வேண்டாம்… என்னை நெருங்காதே…’ என்று கட்டளை இட நினைத்தாலும் அவளால் முடியவே இல்லை.
அவனுக்கு இல்லை என்று சொல்லிப் பழக்கப்படாத அவள் மனது, இப்போது அவன் நினைவுகளுக்கும் மறுப்பு சொல்ல முடியாது திண்டாடிற்று.
‘காதல் இது தானா?’
கேள்வியைக் கொஞ்சம் மாற்றிக் கேட்க வேண்டுமோ?
‘இது காதல் தானா?’
‘ இருக்கலாம். ஆனால்…?’
ஆனால் இது பொருந்தாத காதல்..!
முறையில்லாத காதல்..!
முழுமை பெறாத காதல்..!
முக்தி அடையாத காதல்..!
சுபம் என்ற முடிவே இல்லாத காதல்!
அவள் அறிவு, மனதை எதிர்த்து அடுக்கிக் கொண்டே போனது.
‘நீ சொல்வது உலகத்தின் பார்வைக்கு! உனக்கும் அவனுக்கும் தெரியுமே, உங்கள் பந்தம் எத்தகையது என்று!’
நல்லது செய்ய என்று எடுத்துக்கொடுத்த மனசாட்சிக்குக் கிடைத்தது பெரும் தோல்வியே!
‘என்ன தெரியும் அவனுக்கு என்னைப் பற்றி? நான் யார், எந்த ஊர், என் குடும்பம் எத்தகையது? இதில் ஒன்றாவது தெரியுமா? ஏன், என் முழுப்பெயர் கூட என்னவென்று தெரியாது அவனுக்கு…’
‘இதையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள அவனுக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது? அவன் பிடிவாதமும் ஆசையும் நினைத்ததை நடத்தியே தீர வேண்டுமென்ற கொள்கையும் மட்டும் தானே அவனுக்குப் பிரதானமாக இருந்தது?’ – அவள் மனதின் குற்றச்சாட்டு.
‘அவனைச் சொல்லி என்ன? நீ மட்டும் ஒழுங்கா? முட்டாள் மாதிரி எதையும் யோசிக்காது, அவன் விருப்பத்துக்குத் தலையாட்டி விட்டு இப்போ அவனை மட்டும் குற்றம் சொன்னால் ஆகிற்றா?’
கொண்டது காதலா, இல்லையா என்று ஆராய்ந்து அறியும் முன்னே மோசமாகத் தோற்கடிப்பட்டாய். அதன் பின்னும் புத்தி வராது, சமூகம், கலாச்சாரம், கட்டுப்பாடு எல்லாவற்றையும் மறந்து, அவன் காதல் என்று நின்றதும் மயங்கிக் கிடந்தாய் என்றால் இது எல்லாவற்றுக்கும் முழுமுதல் காரணம் நீ தானே?’ அவள் அறிவின் குற்றச்சாட்டு இதுவாகத் தான் இருந்தது.
அறிவின் பார்வைக்கு சரி, தவறு, நியாயம், அநியாயம் மட்டும் தானே தெரியும்? சரியா தவறா முறையா இல்லையா என்ற எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காது, உணர்வுகளின் உந்துசக்தியால் உருப்பெறும் காதல் பற்றிய முழுப் பாடத்திட்தத்தை இதற்கு முன் இருந்த இயற்கை அறிவாலும் விளங்கிக் கொள்ள முடியாது. இப்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவாலும் கூட அதை விளக்கிட முடியாது.
மாயங்கள், மந்திரங்கள், வசியங்கள் என்று இன்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாத எத்தனையோ வஸ்துக்களில் இந்தக் காதலையும் சேர்த்து விடலாம்.
தன் சிந்தனைகளுக்குள் மூழ்கி நின்ற மெர்லினைக் கலைத்தது கீழே கேட்ட ஆரவாரம்.
‘ஓ.. எல்லாரும் வந்திட்டாங்க போல…’ என்று எண்ணிக்கொண்டவள் நொடிக்குள் தன்னைத் திருத்திக்கொண்டு, தான் இப்போது கீழே செல்லாவிடில் நிகழக்கூடிய அனர்த்தம் உணர்ந்து, அங்கிருந்து நகர்ந்தாள்.
கண்ணாடியில் அவள் வைத்த பொட்டு மாத்திரம் அங்கேயே தேங்கி விட்டிருந்தது.
நிழலாகவேனும் இவளோடு இணைய இன்னொரு ஒரு வாய்ப்புக் கிட்டாதா என்று காத்திருக்கும் அவ்வளவன் போல், பிம்பமாகவேனும் மறுமுறை அவள் நெற்றியோடு பொருந்திக் கொள்ளும் ஆசையோடு காத்திருக்கிறதோ அதுவும்!?
******************
உயிரை உறைய வைக்கும் குளிரின் தாக்கத்தில் வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் அனைத்தையும் இண்டு இடைவெளி இல்லாமல் இறுக மூடி, ஊர் மொத்தமும் ஆழ்ந்த சயனத்தில் இருக்க…
ஒருவன் மட்டும் என்னவோ, பீச் ஹவுஸ் வந்து விண்டோவைத் திறந்து வியூ பார்ப்பது போல், திறந்திருந்த தன் அறையின் பெரிய பிரெஞ்ச் விண்டோவின் வழியே, மின் விளக்குகளின் ஒளியோடு போராடித் தன் கருமையைக் காக்க முயன்று வெற்றி கொண்டிருந்த இருளை இலக்கின்றி வெறித்திருந்தான்.
அதீத குளிரை அவன் உடற்கூறுகள் உணர்ந்தாலும் அதற்கான எதிர்வினையை ஆற்ற அவன் உள்ளம் உடலுக்கு அனுமதி கொடுக்கவில்லை.
“வீட்டு உள்ள இருக்கு போதே என்னால ஸ்வெட்டர், ஜெர்கின் ரெண்டும் இல்லாம இருக்க முடியல. நீ எப்பிடி இவ்ளோ அசால்டா வெறும் டீ-ஷர்ட் ஜீன்ஸ்ல இவளோ தூரம் போயிட்டு வர? உனக்குலாம் உடம்புக்கு எதுவுமே ஆகாதா?” சாதாரண பழக்கமாக இருந்த போது ஆச்சரியத்தோடு வந்த கேள்வி.
“உண்மையை சொல்லு, நீ மனுஷன் தானா? இல்லை இரும்பால செஞ்ச ஏலியனா? குளிரவே செய்யாதா டா உனக்கு? இப்பிடியே இருந்தா ரத்தம் உறைஞ்சு செத்துடுவ நாயே!” இது நெருங்கிய தோழன் என்ற நிலையில்.
“ஜெர்க்கின் எடுத்துட்டுப் போறியா யுவி? எடுத்துட்டுப் போனா மட்டும் பத்தாது. போடவும் செய்யணும். இப்போ தான் கோல்டு கொஞ்சம் குறைஞ்சிருக்கு, மறுபடியும் எதையும் இழுத்து விட்டுக்காத.” அவள் மனதில் காதல் அரும்பியதற்குப் பின்… அதை அவனிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்…
“யுவி! மிதி வாங்காம ஒழுங்கா இதைப் போட்டுக்க!” இது இருவரும் ஒருசேரக் காதலில் கரைந்து காணாது போய்க்கொண்டிருந்த காலத்தில்… சொன்னதோடு நில்லாமல், குளிரைத் தாங்கும் அங்கி அத்தனையையும் அவளே மாட்டியும் விடுவாள்.
“குளிரை விரட்ட கம்பளி, ஸ்வெட்டர், ஜர்க்கின்… இதுலாம் எதுக்கு பேபி? அதான் நீ இருக்கியே!? என்னை டைட்டா ஹக் பண்ணிக்கிட்டேன்னா குளிர் போயே போச்சு!” இது எப்போது? ம்ஹூம்… சொல்வதற்கில்லை.
அவளுடன் எல்லா படிநிலைகளையுமே கடந்து விட்டான். ஆனால் அவளைப் பற்றிய அடிப்படை விடயங்கள் எதுவுமே தெரியாது.
அவள் தாய்நாடு இந்தியா என்று உறுதியாகத் தெரியும். ஆனால் இந்தியாவில் எங்கே என்று உறுதியாகத் தெரியாது. தமிழ் பேசியதால் தமிழ்நாடு என்று இவனாக ஊகித்திருக்கிறான்.
தமிழ்நாட்டில் எங்கே?
சென்னையா? சேலமா?
திருச்சியா? திருநெல்வேலியா?
கும்பகோணமா? தஞ்சாவூரா?
சத்தியமாகத் தெரியாது.
இதையே தெரிந்துகொள்ளாதவனா அவள் அப்பா பெயர், குடும்பப் பின்னணி, பூர்வீகம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கப் போகிறான்?
சரி போகிறது; ஒரு ஃபோட்டோ?
ம்ஹூம்… முழுதாய் ஒரு வருடம் உடன் இருந்தவளின் ஒற்றைப் புகைப்படம் கூட இவனிடம் இல்லையே!
புகைப்படம் எடுக்க என்று அவளைக் கைக்குள் இழுத்துக் கொண்டபோதெல்லாம் இவன் தொலைபேசியைத் தூரம் தள்ளிவிட்டு, அவள் தொலைபேசியில் கிளிக்கிக் கொள்வாள் அவள்.
ஒரு ஃபோட்டோவாவது எனக்குக் கொடு என்றால் முடியவே முடியாது என்று மறுத்து விடுவாள். இவன் தொலைபேசி பாதுகாப்பானது இல்லையாம் என்று விடுவாள்.
உண்மையும் அது தான். இவன் நம்பர் லாக் இவனோடு கூட இருக்கும் அனைவருக்கும் தெரியும்படி தான் இருக்கும் இவன் தன் பிரைவேசியை பாதுகாக்கும் லட்சணம்.
இதில் அவளதை எப்படிப் பார்த்துக் கொள்ளுவானோ என்ற சந்தேகத்தில், இவனுக்கு மெசேஜில் ஐ லவ் யூ கூட போட மாட்டாள் அவள்.
ஒருமுறை இரண்டு நாட்கள் சேர்ந்தது போல் வெகேஷன் கிடைத்ததும் வரமாட்டேன் என்றவளை வற்புறுத்தி, காதலர்களின் நகரம் என்று பிரசித்தி பெற்ற பாரிஸ் அழைத்துச் சென்றிருந்தான்.
லண்டன் டூ பாரிஸ்… இரண்டு கால் மணி நேர ட்ரெயின் பயணம். இன்று நினைத்தாலும் சொர்க்கம் எல்லாம் அந்த நாள் கொடுத்த இன்பத்துக்குக் குறைவாகத் தான் சுகத்தைக் கொடுக்கும் என்று தோன்றும். இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை இறுக்கியது அந்தப் பயணம் தான்.
பாரிஸ் வந்தால் அடுத்து என்ன, பெரும்பாலான எல்லாக் காதல் ஜோடிகளும் செய்வது போல், ஈபிள் டவர் முன் அவளை நிறுத்தி, தங்கள் முத்தக்காட்சியை புகைப்படம் எடுக்க அவன் மூளை திட்டம் போட்டிருக்க, அதைத் தவிடு பொடியாக்கினாள் அவன் காதல் வில்லி.
அவளிடம் காலில் விழாத குறையாக மன்றாடியதற்குப் பலன் கடைசியில் நெற்றி மேல் தான் கிட்டியது. ஆம்… இதழ் முத்தப் புகைப்படக் கோரிக்கை ரத்தாகினாலும் வருந்தி நின்றவன் முகம் காணத் தாளாது நெற்றி முத்தம் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுக்க சம்மதித்திருந்தாள்.
வழக்கம் போல் அதுவும் அவள் மொபைலில் தான் கிளிக்கப்பட்டது.
‘இதையாவது தாயேன் டி.. சேஃப் ஃபோல்டர்ல போட்டு வச்சுக்கிறேன்!” என்று பாவமாக மூஞ்சியை வைத்து எவ்வளவு கெஞ்சியும் இரங்கவே இல்லை, அவனின் கல்நெஞ்சக் காதலி.
“சேஃப் ஃபோல்டர்னு எத சொல்ற? அந்த ஒன்னு ரெண்டு மூணு நாலுனு பாஸ்வர்ட் போட்டு வச்சிருப்பியே ஒரு ஃபோல்டர், அதுவா? அது தான்னா சொல்லிடு, நான் இப்போவே பிக்-அ டெலீட் பண்ணிட்டு, ரீசைக்கிள் பின்ல இருந்தும் க்ளீன் பண்ணிடுறேன்.” என்று டெலீட் பட்டனை சொடுக்கப் போனவளைப் பார்த்துப் பல்லைக் கடித்து,
“எனக்கு வேணாம். நீயே வச்சுத் தின்னுக்கோ. ஆனா ஒண்ணு டி, நான் எல்லாம் கவுண்ட் வச்சிருக்கேன். கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே அத்தனை ஃபோட்டோஸும் என்கிட்ட வந்தாகணும். எடுத்ததுல ஒண்ணு குறைஞ்சது, அன்னைக்கு நீ முடிஞ்சடி என்கிட்ட!” என்று உறுமியது எல்லாம் இப்போது நடந்தது போல் இருக்கிறது.
ஆனால் அவளின்றி அவன் வாழ்வில் ஐந்து நாட்காட்டிகள் மாறிவிட்டிருந்தன.
இப்படி ஒருத்தி அவன் வாழ்வில் வந்து போன தடமே இல்லாமல், அவனைத் தவிக்க விட்டு சென்றிருக்கிறாள் என்றால் இது எல்லாம் அன்றைய அவனின் அசட்டையீனத்தாலா? இல்லை பொறுப்பற்றதனத்தாலா?
‘நம்பினேனேடி உன்னை? கூடவே தான இருக்க, அப்பிடியே கூடவே இருந்துடுவேனு நம்பித் தானடி அசால்டா இருந்தேன்! என்னை விட்டுட்டுப் போக எப்பிடி டி மனசு வந்துச்சு உனக்கு? ஒரு சண்டைல நான் காட்டின மொத்த காதலும் வெறுத்துப் போச்சா உனக்கு?’
‘நான் ஒத்துக்கிறேன், தப்பு முழுக்க முழுக்க என் மேல தான். அதை சொல்லி என்னை நீ செருப்பால அடிச்சிருந்தா கூட, அந்தக் காயத்துக்கும் உன்னைக் கட்டிக்கிட்டு மருந்து போட சொல்லிருப்பேனே தவிர, ஈகோ பார்த்து உன்னை விட்டுட்டுப் போகணும்னு நினைச்சிருக்கவே மாட்டேன் நான்! ஏன்னா எனக்கு எல்லாத்தையும் விட நீ முக்கியம். ஆனா உனக்கு உன் கோபம் தான் முக்கியமா போச்சு, இல்ல? நான்லாம் உனக்கு ஒண்ணுமே இல்லல?’ மனதோடு அவளிடம் கேள்வி கேட்டவன்,
‘அப்பிடினா போடி.. எனக்கும் நீ வேணாம்…’
‘கோபத்துல கூட என்னால அப்பிடி சொல்ல முடியலடி. உன்னை எல்லாம் அவ்வளவு ஈஸியா எல்லாம் ரிலீஸ் பண்ணிடமாட்டேன். காலத்துக்கும் நீ என்கிட்ட  ஆயுள் கைதியா தான் டி இருந்தாகணும். முடிஞ்சா  அடுத்த ஜென்மம் எனக்கு  ஒரு இருபது வருஷம் முந்தி பிறந்து, என்கிட்ட இருந்து தப்பிச்சுக்கோ!’ எந்த நம்பிக்கையிலோ தெரியவில்லை, மனதுக்குள்ளேயே உறுமலாய் சூளுரைத்தான்.
5 5 votes
Article Rating
Subscribe
Notify of
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Suheera Nusry
Suheera Nusry
14 days ago

Very exciting opening, Veena. Keep it up !

Megalaveera
Megalaveera
7 days ago

nice start

error: இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.